Sunday, May 28, 2006

கவிதைகள் - 2005


1.பாலத்தின் கீழ் நிற்கும் ஒற்றை மரம்

இப்படியே நின்றது அன்றும்

இரவிரவாய் காயும் நிலவு

நிற்காமல் ஓடும் நீர்நிலையென.

இன்று காணக் கிடக்கிறது

மணற்படுக்கை,

நடுவிலுள்ள பாலம்.

பாலம் சுமக்கும் மக்கள்

மணற்கடலில் நிலாச்சோறுண்டு

மரத்து உச்சி நிலவில்

காதல் பேச

பாலம் கனவு

மரம் உண்மை.

ஒற்றை மரக்கிளிக்குஞ்சு

உயரப் பறக்கும் கனவுகள்

உரக்கக் கத்தியும் தொலைவுகளில்

மணல் வெளி.

ஒற்றைமரமும் கனவு

மணல்வெளிபோல்.

- நன்றி: சாகித்திய அகாதமி

2. சுயம்

செதுக்கலுற்ற செங்கற்களாய்

உணர்வுறைந்து உள்போந்த

தனிமை இருள்வெளி

தடம் பெயர்ந்தழிந்த

மணல் நடுவே

நிலவை நெருப்பாக்கிப்

புணர்ந்தொழியும்

நண்டுக்கூட்டம்.

தண்ணீரில் காய்ந்தழிந்த

சூரியனை

நினைவாழத்தில்

சுமந்தழிந்த கரையான்கள்

வழிப்பெயர்ந்த

விட்டில் பூச்சியாய்

தொலைவுற்ற பாதையைத்

தேடித்திரியும் தற்காலிகச் சுயம்.

இனித்தொடரும்

என் பெயரிழந்தப்

பெரும் பயணம்.

எண்ணக்கடல் கடந்த துரும்பு

எழுத்தாணியுள்

சிக்காத ஓவியம்

உறவுக்கும்

தோழமைக்கும் நடுவே

தாண்டித் தடம் மாறும் வேள்வி

என

சொல் புதிதாய்

பொருள் புதிதாய்

சொப்பனத்திற்கப்பால்

ஓடிய கடல் விளிம்பாய்

எட்ட எட்ட ஓடுவதாய்

இன்னும் இந்த வாழ்க்கை.

5. நித்தியத்தைத் தேடும் நீயும் நானும்

சரித்திரத்தின் சுவர்களில்

அறைகிறாய் நீ.

பூமியினடியாளத்தில் புலம்பல்கள் கேட்க

தெருவெங்கும் முகம் புதைத்து

பொருள் கேட்கிறாய் நீ.

சிதைவடைந்த உன் கன்னங்களும்

சித்திரவதையுறும் உன் கைகளும்

என் கனவுகளை அச்சுறுத்துகின்றன.

முலையுற்ற மார்புகளினூடே உன்னை

மெய்ப்பிக்க முயல்கிறேன் நான்.

சுவாசப் பாலூட்டி உன்

இருப்பைத் தொழுகிறேன் நான்.

சிந்தனைகளை எறிந்துவிட்டு

சிரத்தை என் மடியிலிடு என

மண்டியிடுகிறேன் நான்.

சரித்திரம் மறதியைக் கொன்று

ஆடும் ஊழியென்கிறேன்.

தத்துவம் பழைய பொய்களை

நிஜமாக்கும் அறுபட்டகமென

அறைந்து சொல்கிறேன் நான்.

ஏதோ ஒரு நாள் அஸ்தமனத்திற்குப்பின்

கழிக்கப்பட்ட இரவின் நாழிகையாய்

நீ மறைந்துவிட்டிருப்பாய்.

கூடவே, உன்னுடன் நிஜமான

நிமிடங்களை கழித்த நானும்.

6. வாழை இலை

முகமிழந்து

அடியிற்கிடக்கும்

வா

ழை இலை.

பச்சையாய் சிரி

த்து

பசுமையில் மறை

த்து

வைக்குமுனக்கும் என

க்கும்

ஆன

உறவுகளை.

தோண்டற்

கிடைக்கும் உன்

தன் அடி

மனதில்

அளப்

பறியக்

கனவுகளின்

விகுதி.

ஏதோ சோ

ற்றைத் தின்ற

பின்

பு

சிறியதாகிப்

போகும் வா

ழை இலை.

7. இரைதேடி

வான் விழுங்கி

வயிற்றில் நெருப்பாக்கி

கடல் விழுங்கி

கிணற்று நீராக்கி

கண்ணீரின் உப்பையுண்டு

காடுவிளைவித்த பூமி

வெண்ணீரைக் கொட்டி

விரல் நீட்டியது.

இன்னும் பசி இன்னும் பசியென.

இடுக்கிடுக்கே வாய் பிளந்து

இறையை, மனிதரை

உண்டுப்பெருத்தது.

பெண்ணென்பார் பூமியை..

பொறுத்த பின்னர்

வெடிக்கத்தான் வேண்டும்.

2002 குஜராத் சம்பவத்திற்குப் பிறகு

நன்றி: பறத்தல் அதன் இயல்பு

8. வழியை யாரோ மாற்றி வைத்து விட்டார்கள்

கள்ளுண்டவளானேன் நான்.

கனக்குது இதயம்.

கைக்கெட்டாமல் போன

வானத்தினடியில்

கொட்டாவிவிட்டுக் கொண்டிருக்கும்

இந்த கிழட்டு மரக்குயில்கள் கண்டு

“சொர்க்கத்துக் குயில்கள்

நீயின்றி அமைதி காக்கின்றன’

என்று பிரெஞ்சுப் பழமொழி

பேசுகிறாள் தோழி.

சொர்க்கத்தைத் தேட வேரோடிப்போன

இந்த வழியில்தான்

காணாமற்போனது கானகம்.

மனது நிறைய கானகம் கொண்டு

வழி மறந்தேன் நான்.

மாற்றி வைத்த வழிகளினிடையே

கவிதை பேசப்போய்,

கனக்குது இதயம்

காக்கையின் எச்சமாய்.

7. இனியும் எத்தனை நாட்கள்

இன்னமும் எத்தனை நாட்களென

இயலாமை தொனிக்கக் கேட்டேன்.

இறுகி வளர்ந்த இந் நாகரிகப் பாறை

உடையப் பெருகும் மானிட ஊற்றென.

எரிந்து மடியும் வீட்டின் சாம்பலும்

எடுத்தெரியப்பட்ட வயிற்றுச் சிசுவும்.

சாதித் தீயின் சாத்தியம் வளர

ஆதியும் அந்தமும் ஆடிப்போனேன்.

இனியொரு முறை நான்

இறக்க வேண்டாம்.

எனில் இனி எத்தனை நாட்களென

இயலாமை தொனிக்கக் கேட்டேன்.

- குஜராத் 2002 இனப்படுகொலையின் பிறகு

8. காதல் கொண்டு செல்

களம் பெரியது.

கையகப்பட்ட வாழ்க்கையும் அதுவே.

நிலவு, நித்திரை, நேற்றிரவு கண்ட

மொட்டை மாடியென

நினைவு பொய்யில்லை.

நெருஞ்சியென நீர்க்கோர்த்துப்

பருத்துக் கிடக்கும்

கனவும் அப்படித்தான்.

நினைவுகள் கனவுண்டு

நகருகையில் நீண்டு நீண்டு

நெருங்க முடியாமல் ஓடும்

நாட்குறிப்பு.

குறித்து வைக்க நாளா இல்லை?

கொண்டுவா பார்ப்போம் எனக்கூற..

களம் விரியும்

கனவு போல். கனவினுள் புகும் காற்று போல்.

நினைவுகள் பெரிதாகிக் கொண்டு போகும்,

பின்னர் நாட்குறிப்பை கிழித்துக் கொண்டு கொட்டும்.

வருகின்ற நாட்கள் முட்டித் தலை சாய்க்க

கடந்ததன் நகமாய் காலம் பிடித்துந்த

கழிவிறக்கம் கொண்டு சொல்லும்

“காதல் கொண்டு செல்” என.

9. அழகிகள் உறங்கும் நகரம்

இரவு நேரத்தில் ஒலி எழுப்புவதாய்

தோன்றிற்று இந்த அலமாரி.

கட்டிவைக்கப்பட்ட உலகங்களாய்

தோன்றின புத்தகங்கள்.

வார்த்தைகளும் விஷயங்களும் தாண்டி

வடிவமுற்று வியாபித்த செவ்வகங்கள்.

புதியவற்றின் வாசனை

பழையன கொண்ட பூச்சி வாசம்.

அட்டை கிழிந்து தொங்கும் அழகு.

நூலகத்திலிருந்து தப்பிவந்தவை,

நண்பர்களிடம் திருப்பித்தராதவையென

நித்திரை கொள்ளுமுன் பார்த்தேன்

எனது அலமாரி,

அழகிகள் உறங்கும் நகரம் என.

10. நீ

முகச்சவரம் செய்ய ரசம் போன கண்ணாடி

முட்டியைத் தொட்டிராத அரைக்கால் சராயின்

பாக்குக் கறை

போட்டுப் பிய்ந்த பெல்டின் முனைக் கம்பி

குதிக்கால் ஓட்டையான “கோவார்டிஸ்” செருப்பு

என நீ மனமுடைவது வெளிதெரிந்தாலும்

தீட்டுத் துணிக்கும் தினம்போடும் உள்ளாடைக்கும்

ஆத்தாவைக் கேட்டால் அது திட்டும்,

நீ வேலைக்குப் போகும் பையன்.

கண்ணாடி வளவியும் கலர் ரிப்பனும்

பத்து ரூபாய் கொலுசும் பழசாகிப் போக

பாவாடை தாவணியும்

பவுன் நகையும் தேடப்போய்

பெரிய மனுசனானாய் நீ.

பானை துலக்கலானேன் நான்.

11. மன சஞ்சாரம்

இனி பெறுவதற்கு ஒன்றுமில்லை

என்றபோதுதான்

இழந்தவற்றை நினைவு கூற நேரிற்று.

தொடர்களின் முடிவு

மற்றொரு தொடராகவும் இருக்கலாம் என்னும்போது

வாழ்வின் அநித்தியம் கேள்விக்குறியாகியது.

கேள்விக்குள்ளாக வேண்டியது

வாழ்வா அநித்தியமா எனக் கேட்கப்போய்

‘நித்தியமாய் கொள்ளவேண்டியவை எவை?’,

எனத்தோன்ற - இதில்

நிதம் தொலைத்த வாழ்க்கை

உரக்கக் கூறியது

இனி பெருவதற்கொன்றுமில்லை

இருப்பதில் இழைந்து போ.

12. ஏன்?

உரக்கக் கத்தினேன் கேட்டதா என்றாய்.

அது உன் கனவில் என்று ஏன் சொல்ல மறந்தாய்?

13. அம்மா

பஞ்சுபோல போகுதே வானத்தில்

என்னவென்றேன்.. நீ

வெண்குதிரையில் இளவரசன்

பறக்கிறான் என்றாய்.

நிலவுக்குள் தெரிகின்ற களங்கம் கேட்டேன்,

அத்தனையும் வெள்ளி

அசுரன் காக்கிறானென்றாய்.

சவ்வுமிட்டாய் கடிகாரம் வேண்டாமென்றேன்,

கறிகாயில் மிச்சம் வைத்து

வாங்கித்தந்தாய்..

பாரதியார் பாட்டு சொல்லி ஆடச் செய்தாய்.

படுக்கையில் உறங்கிவிட்ட தலைவருடி

பசும்பாலில் தண்ணீர் கேட்டு குடிக்கச் செய்தாய்.

முழுப்பாவாடை தொட்டபின் தழுவி என்னை

முழுவதுமே தோழியாய் ஆக்கிக் கொண்டாய்.

மன்னிக்க முடியாமல் போனேன் அம்மா,

நீ முழுக்காயை சோற்றுக்குள்

மறைத்துவிட்டாய்..

அடுப்புக்கும் கரண்டிக்கும் பெயர்

கணவனென்று அன்றே நீ

சொல்லாமல் ஏன் மறைத்தாய்?

14.இன்னொரு சூரியன்

மனதின் ஆழத்தில் இந்நீளப்பெருங்கடல்

நித்திரை கடந்த இரவில் புணர்ந்து

மேகப் பெருமூச்சின் மோனத்திரைக்குப் பின்

முகமொழிந்தது காமம்.

வெளியே வாவென்றழைத்தன அலைக்கரங்கள்,

இரவெல்லாம் அழும் என் குழந்தையின் ஓலமாய்.

நீர்மையும், நிஜமும் நெஞ்சத்துள் இட்டுக்காய்ந்த

கரும்பாறை திட்டுக்கள்.

இனி வரப்போகும் இருள் விழுங்கு பூதமாய்

இன்னொரு சூரியன்.

கால் பதித்த மணலில் கற்பனை ஒளித்து விளையாடுவன

நிகழும் மனமும்.

கண்ணுக்கெட்டாத இதன் மறுவிளிம்பில்

அலையாய் நுரைத்துக் காய்ந்தன இரவுகள்.

கால் நினைத்து கரையடைந்தபோதெல்லாம்

மனதையடைத்தது வாழ்ந்த கதைகள்,

மணலாகிப் போன வாழாமைக் கதை நடுவே.

15. மனசஞ்சாரம்

இனி பெறுவதற்கு ஒன்றுமில்லை

என்றபோதுதான்

இழந்தவற்றை நினைவு கூற நேரிற்று.

தொடர்களின் முடிவு

மற்றொரு தொடராகவும் இருக்கலாம் என்னும்போது

வாழ்வின் அநித்தியம் கேள்விக்குறியாகியது.
கேள்விக்குள்ளாக வேண்டியது

வாழ்வா அநித்தியமா

எனக்கேட்கப்போய்

நித்தியமாய் கொள்ளவேண்டியவை

எவை எனத்தோன்றவே-இதில்

நிதம் துலைத்த வாழ்க்கை

உரக்கக் கூறிற்று - இனி

பெறுவதற்கொன்றுமில்லை

இருப்பதில் இழைந்துபோ.

16. அப்பா

சைக்கிளின் முன் உட்காருகையில்

ஓட்டிக்கொண்டே பறக்கும் என் முடியைக்

கடிப்பார் அப்பா.

சிலப்போது பல்லிடுக்கில்

என் சுட்டுவிரல் நுழைத்துக் கொள்வார்.

எட்டாம் வகுப்பில்

முழுப்பாவாடைப் பெண்ணை

காது டாக்டரிடம் தூக்கியும் போவார்.

ஆங்கில நாவல் படித்துத்

தூங்கிய காலங்களில் அப்பாதான் கனவில்

துப்பாக்கியும் தொப்பியும் ஏந்தி குதிரையில் வருவார்.

அந்தக் கனவுபோலவே

இன்று நான் குழந்தைப் பருவம் தொலைக்க

அப்பாவும் தொலைந்து போயிருந்தார்.

எஞ்சியிருப்பதெல்லாம் அவர் வைத்தகடனும்

அவர் உதிர்த்த கடும் சொல்லும்தான்.

17. பிரபஞ்ச ஊழி

நகக் கண்ணுக்குள் நிலவைப்

புதைத்த மகிழ்ச்சி.

நெஞ்ச நெருப்பை நிதர்சிக்கத்

துணிந்தவளாய்

அச்சம் களைந்து ஆடை தவித்தேன்.

மனச் சலவையின் எச்சமாய்

மெளனம் கனல் குழம்பாய் விரல் நீட்ட

நழுவித்துலைந்தன என் நட்சத்திர விழிகள்.

தூமை துறந்த காளியாய் நான்

உன்னுடன் பிரபஞ்சமாகும் ஊழியில்

உருகிக் கிடந்தேன்

உன் மடிக்குழந்தையாய்.

18. இரவு

நடுநிசிச் சாளரங்கள்

வழியே நிழல் நீளும்.

நிசப்தத் தியானத்தில்

பிம்பங்கள் அதிர்வுற்று தெரிக்கும்.

நகரத்தின் சன்னல் தெருக்கள்

உண்டு உறங்காதிருக்கும்.

காலத்தின் குறுக்கிலோடும்

வரலாற்றின் நதிபோன்று

நடுநிசியில் ஆம்புலன்ஸின்

ஓசை சாவைச் சொல்லிக் கதறும்.

ஒவ்வொரு வீட்டின் கதவும்

காதுகளை உள்வைத்துக் கொண்டு

கதிரவனுக்குக் காத்துக்கிடக்கும்.

பகார்டி பாட்டிலுக்குள் யாரோகொடுத்த

ஒற்றைரோஜா,

அடுத்த விருந்தினருக்கு அழைப்புவிடுக்கும்.

நாட்களின் இடைவெளியில்

இரவு தன் இருப்பை தானே ரசித்துக் கொள்ளும்

கண்ணாடி பார்க்கும் பெண்போல.

19. மீன்கள்

மீன்களைப் பார்த்திருக்கிறேன்.

நீந்துவனவாய்,

தவழ்வனவாய்,

சிறியவற்றை உண்பனவாய்,

புற அழுக்கை உண்டு வாழ்வனவாய்,

மீன்களைப் பார்த்திருக்கிறேன்.

தரைமீதும்.

20. எல்லாமாகிய

தொட்டும் தொடாமற்

தொடுகோடாய்ப் போன நீ

கட்டித் தழுவாயோவென

வட்டத்திற்கு வருத்தம்.

கட்டிக் கனதூரம்

வட்டமாக்கியதே நானென

ஆரத்திற்கோ ஆராத்துயரம்.

விட்டமாய்ப் பாய்ந்து

விகிதம் பெருக்கி

பரிதித் தொட்டு பல ஆரமிட்டு

சுற்றும் கோட்டிற்கோ

பொல்லாத மெளனம்.

21. சன்னல்

நாம் பேசுவதற்கு என்றுமே ஏன்

சன்னலோரங்களை தேர்ந்தெடுத்தோம்..

நம் வார்த்தைகளை காற்றில்

தொலைக்க நினைத்ததாலா?...

நம் பொய்கள் பூமியைக் கடந்து

ஓடவேண்டும் என்பதாலா?...

நம் அறையின் இருள் நம் அச்சங்களைப்போல்

வெளித்தள்ளப்பட வேண்டும் என்பதாலா..

வெளிச்சங்களில் நம் குரல் விஸ்தரிக்க

இருட்டு மனிதர்களாக நாம் இறந்துபோவது

இதமாயிருப்பதாலா..

நமது இரட்டை வேடங்களை அறையிலிருத்தி

வெளிப்பச்சையை விமர்சிக்க

விடம் கொண்டதாலா..

இல்லை.. கதவுகளினருகில் நாம் வெளியேறிப்

பிரிந்துவிடுவோம் என்பதாலா..

சன்னலுக்குள் ஒரு ஆகாயம்

கொண்டுவந்து சிறைப்படுத்தி மகிழ்ந்தோமா..

அதுவுமில்லை ஆகாயம் சிறையெனவே

அறையை நிர்மாணித்தோமா..

22 .என்னுலகம்

பூங்காவிலிருந்து எழுந்து

பூட்டைத்திறந்து வீட்டிற்குள் போனேன்.

வெறுமை தலை நீட்டியது.

பூச்செடி சில வாங்கி வீட்டில் வைத்தேன்.

கற்சிலைகள் சில,

கால் நோகுமென்பதால் நாற்காலி,

வெற்றுச் சுவருக்கு ஒரு குட்டி ஓவியம்,

எடுத்துப் படிக்க ஏடுகள் பலவென்று

வீட்டை எழுப்பினேன்..

வீடு எனதாயிற்று.

நூலகம், பூங்கா, நெடுஞ்சாலை, நிழற்கூடமென

எல்லாம் போயின..

பொதுச் சொத்து, பொது இடமென

பிரித்துப் பார்க்க

தனிச்சொத்தாய் என்னுலகம் குறுகியது

என் வீடாக..

23. ஏழ்மையெனப்படுவது யாதெனில்..

எட்டு நாள் பட்டினி

அகத்திக் கீரை பறித்துவந்து

அம்மா புகட்டுவாள்.

துணிமணிக் கிழிய பழைய

பட்டுச்சேலை கிழித்துப் பாவாடையாக்கி

பளபளக்கச் செய்வாள்..

பசியோ, தாகமோ..

பகல் முழுதும் விளையாட்டு,

இரவில் பாட்டென.. எல்லாக் காலமும்

நல்லாய்ப் போகும்.

ஏழ்மையை உணர்ந்தது

எட்டாம் வகுப்பில் வரலாற்றுப் புத்தகம்

திருடிய போதுதான்.

24. மெளனம்-மொழி-சாத்தியம்

வெற்றுத்தாளென ஒரு

ஒற்றைத்தாளை

பார்க்கையில் விளையும்

சந்தோஷம், ஏன்

ஒரு வெற்றுநாளின்

வெறுமையை கவலைக்கிடமாக்குகிறது.

பொருளற்ற அறையின்

எதிரொலிச் சாத்தியம்

மனதிற்கும் வாய்க்கையில்

மெளனம்தான் அரவம்.

புற்றின் வெறுமை - காற்றோட்டம்.

புதிய பரிமாணம் - வளர்ச்சி.

வெற்றுத்தாள் முன் மட்டுமே

எண்ணற்ற சாத்தியம்.

25. இனி சிட்டுக் குருவிகளிடமிருந்து கற்பதற்கு ஒன்றும் இல்லை.

என்முன்னே..

சன்னலின் வழியே சின்னக் குருவிதட்ட

சுக்கு நூறாய்ப்போன கண்ணாடியூடே

நான் என்று உணர்ந்த நான்

நானாகிப்போன நான்

என் முகவெட்டும் புகைப்படமும்

என் கொங்கைகளும் தாய்மைப் பசியும்

மனவெளியும் ஓவியமும்

இன்னும் பலவும்.

பிணி கொண்டலையும் புலியைபோலவே

அனுபவம் மதர்த்த தனிமைத்தேடலில்

நான் பெரிய மிகப்பெரிய

போரில் புஜம் தட்டும் பகவானேபோல

என் முன்னே..

நான் மரமாய், கிளையாய், மதிற்சுவராய்,

கற்றூணாய், காகிதமாய்

எனக்கு வெளியே

எதிரொலி மறுத்த நிஜமாய்..

சொல்லின் பொருளுக்கப்பால்..

பறந்து சென்ற சிட்டுக்குருவியறியாத ரகசியமாய்

செயலாய் சுயமுற்றெழுந்த நான்

இனி சிட்டுக்குருவிகளிடமிருந்து

கற்பதற்கொன்றுமில்லை.

26. வாமனப் பிரஸ்தம்

அப்பாவுக்கு போன்சாய்களைப் பிடிக்காது.

அம்மாவின் பிறந்தகத்தை குந்தகம் சொல்வார்.

ஓவியம் தெரிந்தும் அம்மா

அதிகம் வரையமாட்டாள்.

பாடத் தெரிந்தும் லவகுசா பாடல்கள்

மட்டும் பாடி கண்ணீர் உகுப்பாள்.

அம்மாவின் செருப்பு எப்போதும்

குழந்தைகள் அளவின் நடுவே.

நாற்பது வயதில் நடு வீட்டில்

கோலி விளையாடும் குழந்தையாய் போனாள் அம்மா.

வாமனப் பிரஸ்தமாம் போன்ஸாய்கள்.

அப்பாவுக்கு போன்ஸாய்கள் பிடிக்காது.

27. அனுமதி

என் கூந்தலை வாரிக் கலைத்தாய்.

கோடையிலும் கைகூடிப் பிரித்து..

வேர்த்தது..அன்பிற்கு.

இசைதட்டுக்களோ இன்னமும் நம் செவிகளில்..

சைக்கிளின் பின்னிருக்கையை கிழித்த காற்று

இன்னும் நாம் வசித்த நகரத்தில் நமது சுவாசமாய்..

நினைவுகளில் நானும் உன் கூந்தலை

கலைத்து வாரினேன் - எனினும்

உன் மனைவி கருவுற்றபோது மட்டுமே

உன்னுடன் கலவி கொள்வதாய்

கனவு கண்டு கொண்டேன்.

28. கா-க்-கை

ஓட்டில் இடப்பட்ட அணிற்குஞ்சு

மதிய வெய்யிலில் வீட்டிற்குள்

எட்டிப் பார்த்தது.

நெடுநாள் சிநேகம்.

கடும் சண்டை, கோபம்,

பணக்கூட்டல், அன்புக் கழித்தலென

பலவும் சினந்து பயணப்பட்டான்.

ரோட்டின் மிக அருகில் வீடு.

நெருங்கத் தொலைவுற்றது.

சாமான்யச் சூரியனோ சட்டைதாண்டி

வாட்டி வருத்திற்று.

சாவுக்குச் சம்பிரதாயம் தவறாதே என

மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

நியாயப்படுத்த வலிந்தால்

நினைவுப் பாதையொன்றும்

நேர்ப்பாதையாய் தெரியவில்லை.

உணர்வு வந்தவனாய் ஒப்பாரி

கேட்டு நின்றான்.

கூட்டம் உள்ளிருக்க

கூரைக்கு மேல் பார்த்தான்.

காக்கை கைபற்ற கத்திற்று அணிற்குஞ்சு.

விரட்டினான் கருமையை.

வீட்டிற்குள் விட்டான் குஞ்சை.

வெய்யில் சகித்ததொன்றும்

வீண்போகவில்லை என்றான்.

துன்பம் கைபற்ற தூக்கிவிடல் மனித தர்மம்.

எண்ணம் தலைக்கேற

எளியனாய் திரும்பி வந்தான்.

கனவு கலைந்தெழும்ப கழுத்தை

நிமிர்த்திப் பார்த்தான்.

கூரையில் அணிற்குஞ்சு.

பகற்கனவு வேண்டாமென்று வழமைபோல்

மனைவி வைதாள்.

29. வா..

காணி நிலம் வேண்டாம்

கல்லாய்ச் சமையட்டும் வரைபடங்கள்

கேணியில் தண்ணீரில்லை

கேளிக்கைக்கு எதற்கு தென்னைமரம்.

நிலமெல்லாம் தேசமாக நீரெல்லாம் அணைக்கட்டில்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய தேசம்

இன்று ஏகாதிபத்தியத்தின் கழிப்பறை.

ஆய கலைகள் அறுபத்து நான்கும்

உலகமயமாதலின் குளிர்சாதனப் பெட்டியில்.

கூடிக் குலாவிய கோவிலும் கடற்கரையும்

சுற்றுலாப் பிரிவின் சுயப் பொறுப்பில்.

உழைப்பவர் ரத்தம் உரமாய்ப்போக

ரத்தம் மாறியது சீழாய் என்றோ.

எல்லா நாட்டிலும் ஏழைகள் வீடுகள்

அடிக்கடி எரியும்.

இருப்பவன் திண்ண எஞ்சியதெல்லாம்

எலும்பும் ஊத்தையும்..

மறுத்தென்ன பயன்..

மாபெரும் உலகம் முற்றிலும் நாறுது..

மலம் அள்ளலாம் வா..!

30. சதுரங்கக் கவிதைகள்

ஒன்று

குதிரை பாயும் மூன்று கட்டம் புயலாய்.

நேரே சென்று நெட்டிப் புறந்தள்ளும் யானை.

தாவிக் குதிக்க மனமிருந்தும்

தவழ்ந்து செல்வார்கள் நம் சிப்பாய்கள்.

சட்டம் அப்படி.

உனக்கும் எனக்கும் தெரியும்

ஆட்டத்தில் நாம் வெறும் பொம்மைகள்.

ஆட்டுவிப்பவன் அறிவானா

நாம் நிறங்களில்தான் எதிரி என்று.

இரண்டு

கறுப்பும் வெள்ளையுமாய்

காலம் நகர்கையில்

எடுத்து முன்வைக்கும் எல்லாக் குதிரையும்

விடுத்துப் பின்வாங்கி வீணே

இருத்தல் தரிக்கும்..

இருப்போ இறப்போ.. எல்லோர் மனதிலும்

கட்டங்கள் சாம்பலாய் கலந்து கிடக்கின்றன.

கனவு தரிக்க,

ஓர் நாள் கருப்பிலோ வெள்ளையிலோ

கலக்கலாம் நாம்.

எனில் கனவைத் துலைத்துவிட்டு

கட்டம் தரித்து கொண்டோம்..

கடப்பது எந்நாளோ ..

கடவுளிடம் கேட்டுச் சொல்வாய்.

மூன்று

ஏசு நாதர் திரும்பிப் பார்த்தார்

எல்லா இடமும் குதிரை.

31. மூடிய அறை

ஒரு நீண்ட பகலின்

ஒளியில் குளிக்கும் கட்டிட வெளிப்புறம்.

பகலே இரவாய் பூட்டிக்கிடக்கும்

இருண்ட அறை.

சொல்வது தீர்ந்து தீர்வே சொல்லாய்

உருக்கிய சுயம் -

சொற்களின்றி சுத்த மெளனமாய் பூட்டிய அறை.

மெல்ல அசையும் பூனையின் காது

இருளில் தெரியும் எதுவோபோல..

காற்றில் அசையும் கயிறும் கூட

கண்ணாடியின் முன் உயிராய்த் தோன்றும்.

அமைதியும் இருளும் தியானமாய்ப் போக

நினைவுகளைக் காய்ந்து அழிக்கும் மெளனம்.

மெல்ல அசையும் திரையின் இடுக்கில்

விழுந்து சிதறும் வெண்மணி வெளிச்சம்.

தோற்றம், தெளிவு, சுவாசக் கறையென..

வெளிச்சக் காற்று விரசம் பயில

தியானம் கலையும்

உலகம் நோக்கி.

32. அவள்

தொலைவில் மரத்தினடியில்

தொங்கும் கொங்கைகளுடன் ஒருத்தி.

என் வாயில் தாண்டி, சன்னல் தாண்டி,

வழி தாண்டி, மொழிதாண்டி,

மங்களூர் யாழ்ப்பாணம், மொரிஷியஸ்,

ஆப்பிரிக்கா, க்யூபா, டுனீசியா

திரும்பவும் டுனீசியா, க்யூபா, ஆப்பிரிக்கா,

மொரிஷியஸ், யாழ்ப்பாணம், மங்களூர் தாண்டி

எனது பார்வை அவள் மீது.

காலை கண்ணாடியின் முன்

மைவைத்தேன், உதட்டுக்குச் சாயம் எழுதினேன்.

எல்லா ஒப்பனைக்கும் பிறகு

ஓயாமற் தேடினேன் என்னை

எல்லாக் கண்ணாடியின் முன்னும்,

இந்த உலகம் வளரும் முன் இருந்த என்னை

என்ற ஈட்ஸின் பாடல் வரியையும் தாண்டி

எனது பார்வை.

தோல் சுருங்கலில் தொலைத்த

நாகரிகம் முழுவதையும் கால் ஆணியின் இடுக்கில்

தொட்டுத்தடவிக் கொண்டிருந்த அவள்,

இருட்டின் கருக்கலில் மொழியையும்

துலைத்துவிட்டிருந்தாள்.

விடியல் வருமென்று என்னால்

சொல்ல முடியவில்லை.

வரைபடங்களை ரப்பரிட்டு

அழித்தால் தெரியலாம்

அவளது தூமைத்தடம்.

அதற்கு நான் என்ன செய்ய?

அதனால் இளமை வருமென்றும்

சொல்வதற்கில்லை.

உரக்கக் கூவினேன் அவளை அழைக்க

வருகிறேன் என்கிறாள்

வாழ்க்கையின் முடிவில்.

அதுவரை பார்ப்பாள் அவளும் என்னை.

33. எல்லாம் வல்ல..

பரீட்சைக்கு உட்கார்ந்தேன்

வாத்தியார் சொன்னார் எல்லாம் வல்ல..

வேலைக்குக் கிளம்பினேன்

அம்மா சொன்னாள் எல்லாம் வல்ல..

வாய்ப்பாடு நினைவில்லை

வழியெல்லாம் எல்லாம் வல்ல..

காலி இடமெல்லாம் கட்டடங்கள்

எல்லாம் வல்ல..

இடுகாட்டிற்கிடமில்லை

பொசுக்கிடுவோம் எல்லாம் வல்ல..

இல்லமே இல்லையென்போர்

என்ன செய்வார் எல்லாம் வல்ல..?

34. முலைகளும் இறகுகளும்

வாழ்வின் ரகசியங்கள் பொதிந்த

நம் பொய்கையில்

நடுங்கியது ஆகாயம்

நாட்டமின்றாடியது நித்திலம்.

ஊடுறும் தனிமையின்

உண்மைகள் பொய்த்ததன் அழகில்

இலைகள் ஆமையாக

ஆமைகள் இலையாய்த் திரிந்தன.

தரையற்றுத் தகிக்கும்

தர்க்கக் கடவுளின் கானற்

தீத் தாகத்தில் திறமின்றித்

தளர்ந்தோம் நாம்.

கற்பனைப் பகைவனை

முட்டித் தள்ளிக் கொண்டு

முகட்டின் விளிம்பில்

மூச்சு வாங்க நின்ற நான்,

கேட்டேன் உன் கடைசி கேள்வி என்னவென்று?

நீ கேட்டாய்,

“சுகமாக இருக்கிறாயா?”

என்றுன் காதலிடம்.

நான் சொன்னேன்,

கேள்விகள் கேட்பதே என் கடைசி

காதல் என்று.

மனிதனின் பலம் கேள்விகளிலென்பதும்

பலவீனம் பதில்கள் தேடுவதிலென்பதும்

எனது நம்பிக்கை.

தேடித் துலைத்துக் கொண்டிருக்கிறோம்

நம் காதல்களை, கடவுளர்களை, கேள்விகளை

என் பாரமுற்ற முலைகளுக்கும்

உனது எல்லையற்ற இறகுகளுக்கும் ஊடே.

35. உடலைத் தவிர்த்து

உடலைத் தவிர்த்தென்ன உண்மை

வேண்டும் உங்களுக்கு..

அண்ணா சாலையின் ஆடை விளம்பர

அழகியின் உடலும்,

தேவியின் திரையில் தீண்டத் துடிக்கும்

திரைப்பட உடலும்,

திண்றுத் தொலைக்கும் வறுகடலை

காகிதம் வரிக்கும் அந்த கவர்ச்சிப்

படமும் என்னுடலல்ல

என் இனப் பெண் உடலுமல்ல

உரக்கக் கூறினால்..

அது வர்த்தகம், உலகமயம், குடும்பம்,

கலாச்சாரமென சங்கம் முதல்

தன் அங்கம் காட்டி மார்பு மதர்த்த

ஆண்மையின் உடல்.

அவனவன் நோக்க உண்மை

தெரியும் உம் அகக் கண்ணாடியில்.

கவிதையில் எழுத கற்பென்னவாகும்?

கழுதை.. இருந்தால் கதறும்..

இருபாலும் வேண்டுமென்று..

36 கனவுகள்

நூலாம்படையில் புனைந்த கனவுகள்.

பல்லியின் வாயில் நுழைந்த சிலந்தி.

சுவராய் மெளனித்த மனதின் இசை.

இசையும் மெளனம் இழையிற் பெருகும்.

இழையோ மறையும்.

உடையை கிழித்து வளரும் சதை.

சதையில் இழையும் சிலந்திகள் கதை.

4 comments:

இளங்கோ-டிசே said...

கவிதைகளுக்கு நன்றி. சில கவிதைகள் நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. ஒரேமிக்க எல்லாக்கவிதைகளையும் பதியாமல், பகுதி பகுதியாக பதிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் போலத்தோன்றியது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

Suka said...

நல்ல கவிதைகள்.. அனைத்தையும் இன்னமும் படித்து முடிக்கவில்லை.. உங்கள் எழுத்தின் நடை வெகு அழகு. 'பீனிக்ஸ்' என்ற வார்த்தை என்னை இங்கே இழுத்து வந்தது.

சுகா

Unknown said...

I hope that it will be very useful

Unknown said...

எனக்கு இது மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன்